இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை


இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை
x
தினத்தந்தி 2 July 2023 12:30 AM IST (Updated: 2 July 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே கடனை அடைக்க நகை தராததால் இளம்பெண்ைண கழுத்தை இறுக்கி அவரது கணவரே கொலை செய்தார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கடனை அடைக்க நகை தராததால் இளம்பெண்ைண கழுத்தை இறுக்கி அவரது கணவரே கொலை செய்தார்.

கூலித்தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன் பண்ணையை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 30), கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துராணி (25). இவர்களுக்கு உதயபாலா (2), கருப்பசாமி என்ற கதிர் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 25-ந் தேதி 2 குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சி செய்ய முடிவெடுத்து பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதற்காக பூல்பாண்டி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கழுத்தை இறுக்கி கொலை

பின்னர் பணத்தை திருப்பி கொடுப்பதற்காக முத்துராணியின் நகைகளை பூல்பாண்டி கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து, உங்களுடைய தாயாரின் நகைகளை வாங்குங்கள் என்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி வீட்டில் இருந்த துண்டை எடுத்து முத்துராணி கழுத்தில் போட்டு இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூச்சு திணறிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பூல்பாண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவைகுண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

முத்துராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பூல்பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story