நெல்அறுவடை செய்த வயலில்உளுந்து பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம்


நெல்அறுவடை செய்த வயலில்உளுந்து பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம்
x

நெல் அறுவடை செய்த வயலில் உளுந்து பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

உளுந்து சாகுபடி

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி, சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். இதன்படி நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சதவீதம் அல்லது ஒரு கிலோவிற்கு ரூ.50 வீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல் மற்றும் களைகளின்றி வயலை பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம். பயிறுவகை பயிர்களில் இலைவழி உரமிடல் ஒரு முக்கிய தொழில்நுட்பம் ஆகும்.

இலைவழி உரம்

குறிப்பாக நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத நிலையில் இலைவழி உரமாக தெளிப்பது விளைச்சல் அதிகரிப்பதற்கு வழிகோலுகிறது. இலைவழி தெளிப்பாக பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் அதற்குப்பிறகு 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலை ஒரு லிட்டருக்கு 20 கிராம் தெளிப்பதன் மூலம் காய்கள் அதிகம் பிடித்து விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும், மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story