தெப்பக்குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி
தெப்பக்குளத்தில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்
சிவகங்கை
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற தெப்பக்குளம் உள்ளது. சிவகங்கை நகர் முதன் முதலாக ஏற்படுத்தும் போது இங்கு அரண்மனை கட்ட மண் தோண்டிய இடத்தை மன்னர்கள் தெப்பக்குளமாக உருவாக்கினார்கள். நகரின் மையத்தில் அமைந்திருக்கும் தெப்பக்குளம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இந்த தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகள் கொட்டப்பட்டு குளத்தில் உள்ள தண்ணீர்பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறியது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை சிவகங்கை நகராட்சி நிர்வாகம், எல் அண்ட் டி நிறுவனம், தீயணைப்புத்துறையினர் இணைந்து பைபர் படகில் சென்று குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினார்கள். நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பைபர் படகில் சென்று தூய்மை பணி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிவகங்கை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் திட்ட மேலாளர் பிரதீப், ஹெச்.எஸ்.சி. ஆபீஸர் பிரவீன்குமார், கணக்காளர் ராகேஷ் கண்ணன், பிளான் ஆபீஸர் சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன், காந்தி, ராமதாஸ், வீர காளை நாச்சியார், சண்முகராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.