திருச்சி காந்திமார்க்கெட் இ.பி.ரோட்டில் குப்பைகளால் மேடான சாலை


திருச்சி காந்திமார்க்கெட் இ.பி.ரோட்டில் குப்பைகளால் மேடான சாலை
x

திருச்சி காந்திமார்க்கெட் இ.பி.ரோட்டில் குப்பைகளால் சாலை மேடாகி விட்டது. எனவே தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

திருச்சி காந்திமார்க்கெட் இ.பி.ரோட்டில் குப்பைகளால் சாலை மேடாகி விட்டது. எனவே தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ச்சி திட்ட பணிகள்

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையோரமும், சாலைகளின் நடுவிலும் குழிகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதில் காந்திமார்க்கெட் பகுதி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதியாகும். இங்கு தினமும் பொதுமக்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள்.

குப்பை மேடு

இந்தநிலையில், காந்தி மார்க்கெட் அருகே மீன்மார்க்கெட்டில் இருந்து தாராநல்லூர் செல்லும் கீழபுலிவார்டு ரோட்டின் நடுவே குப்பைகள் குவிந்து உள்ளது. சாலையே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் இருபுறங்களில் லாரிகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

மேலும் சாலையோரம் கொட்டப்படும் தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட் மற்றும் வாழைக்காய் மண்டி கழிவுகள் போன்றவற்றால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பல முறை புகார் கொடுத்தும் மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

துர்நாற்றம்

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-.

தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்:-

காந்திமார்க்கெட்டில் இருந்து தாராநல்லூர் செல்லும் கீழபுலிவார்டு ரோடு பகுதியில் பல வருடங்களாக பெட்டி கடை நடத்தி வருகிறேன். இந்த சாலையில் வாழைக்காய் மண்டியில் இருந்தும், காந்திமார்க்கெட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இருந்து சேகரமாகும் குப்பை கழிவுகளை இங்கு ரோட்டின் நடுவே கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளால் 80 அடி அகலம் கொண்ட ரோடு தற்போது 40 அடி அகலம் மட்டுமே காணப்படுகிறது. மேலும் ஆடு, மாடுகள் இங்கு வந்து குப்பைகளை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க தடுப்புசுவர் அமைக்க வேண்டும் மேலும் இந்த பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து எத்தனை முறை புகார் கொடுத்தாலும் எந்த பயனும் இல்லை. எனவே இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

கீழபுலிவார்டு சாலை பகுதியை சேர்ந்த தியாகராஜன்:-

இ.பி. ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் தமிழக அரசின் சார்பில் லாரிகள் நிறுத்தும் இடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு தினசரி கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுவதால் ஏராளமான லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை சாலையோரம் நிறுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், கடும் அவதி அடைகின்றனர். அதோடு இப்பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. அங்கு கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் இப்பகுதியில் நடந்து செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர்.

குப்பைகளால் ஆக்கிரமிப்பு

கட்டிட தொழிலாளி அருண்குமார்:-

தாராநல்லூர் செல்லும் இ.பி. ரோடு சாலையோரத்தில் லாரிகள் நிறுத்தப்படுவதால் காலை, மாலை என இருவேளைகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சாலையில் நடுவே தடுப்பு சுவர் அமைத்தால்தான் இதற்கு ஒரே தீர்வாகும். மேலும் இந்த சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட குழாய்கள் பல மாதங்களாக கிடக்கிறது. ஆனால் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. மேலும் குப்பைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சாலையை மீட்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story