மண்ணில் புதைந்திருந்த விநாயகர் சிலை கண்டெடுப்பு
ஸ்ரீமுஷ்ணம் அருகே மண்ணில் புதைந்திருந்த விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தில் இருந்து கண்டியங்குப்பம் செல்லும் சாலையில் உள்ள குட்டையில் கிடந்த தண்ணீரை வாரி இறைத்து, சிறுவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்லால் ஆன சிலை ஒன்று தெரிந்தது. இதை பார்த்த ஸ்ரீ ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகர் மற்றும் சிலர் அதனை தோண்டி வெளியே எடுத்தனர். அது 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலை என்பது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள், திரண்டு வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அந்த சிலை ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் சீத்தாராமன், கிராம நிர்வாக அலுவலர் கதிரவன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 தந்தங்களும் சேதமடைந்த நிலையில் இருந்த விநாயகர் சிலை தொன்மையானதா? என்பது குறித்து தொல்லியல் துறை ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தாசில்தார் கூறினார்.