காந்தி திருமண மண்டபத்தை தற்காலிக மார்க்கெட்டாக மாற்ற வேண்டும்


காந்தி திருமண மண்டபத்தை தற்காலிக மார்க்கெட்டாக மாற்ற வேண்டும்
x

திருக்கோவிலூரில் உள்ள காந்தி திருமண மண்டபத்தை தற்காலிக மார்க்கெட்டாக மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள ஆபிசர்ஸ் கிளப் பகுதியில் புதிதாக உழவர் சந்தை அமைய இருக்கிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை கலெக்டர் ஷரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அருகில் பழுதடைந்த நிலையில் செயல்படாமல் மூடி கிடக்கும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான காந்தி திருமண மண்டபத்தை பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், திருமண மண்டபத்தை சீரமைத்து தற்காலிக மார்க்கெட்டாக மாற்றுவதோடு, அங்கு வியாபாரம் செய்ய தெருவோரம் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ விற்பனை செய்பவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வாறு செய்தால் வியாபாரிகள், சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்யும் நிலை இருக்காது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக திருக்கோவிலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் சார்பில் நகர தி.மு.க. தலைவரும், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான டி.குணா சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, நகராட்சி ஆணையாளர் கீதா, நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story