குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 140 பேரிடம் ரூ.3½ கோடி மோசடி


குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 140 பேரிடம் ரூ.3½ கோடி மோசடி
x

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி 140 பேரிடம் இருந்து ரூ.3½ கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு சாந்தா டவர் சி-பிளாக்கில் வசிப்பவர் ரவி (வயது 64). இவரிடம் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுரிராஜ் பிரிட்டோ(62) மற்றும் அவருடைய மனைவி புனிதா ஆகியோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த ஒருவர், உயர் அதிகாரியாக உள்ளார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருகிறார் என ஆசை வார்த்தை கூறினர்.

அதனை உண்மை என நம்பிய ரவி, தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி ரூ.5 லட்சத்தை சவுரிராஜ் பிரிட்டோவிடம் கொடுத்தார். ஆனால் சொன்னது போல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தரவில்லை.

இதனால் சவுரிராஜ் பிரிட்டோவிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ரவி கேட்டார். அதன்பிறகு சவுரிராஜ் பிரிட்டோ, அவருடைய மனைவி புனிதா இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரவி, இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் சவுரிராஜ் பிரிட்டோ, அயப்பாக்கம், மதுரவாயல், வடபழனி, சூளைமேடு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த ரவி உள்பட மொத்தம் 140 பேரிடம் இருந்து வீடு ஒதுக்கீடு செய்வதாக கூறி ரூ.3 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சவுரிராஜ் பிரிட்டோவை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story