புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி
புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியானார்கள். மேலும் 67 வீடுகள் சேதம் அடைந்ததுடன், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு வியாபாரி
நாமக்கல் அருகே உள்ள மோகனூரை சேர்ந்தவர் தில்லைக்குமார் (வயது 35). பட்டாசு வியாபாரி. பட்டாசு விற்பனை செய்ய அரசு அனுமதி பெற்றுள்ள இவர், மோகனூர் அருகில் உள்ள குமரிபாளையம் ஊராட்சி பகுதியில் பட்டாசு குடோன் வைத்து உள்ளார்.
இதனிடையே தில்லைக்குமார், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்ய அதிக அளவு பட்டாசுகளை நேற்று முன்தினம் குடோனில் இருந்து எடுத்து வந்து, தனது வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்தார்.
பட்டாசுகள் வெடித்து சிதறின
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. மேலும் அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன.
இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு அருகே உள்ள வீடுகளில் குடியிருந்தவர்கள் வெளியே ஓடிவந்து பார்த்தனர். அப்போது தில்லைக்குமாரின் வீடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து கொண்டிருந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
வீடுகள் சேதம்
இந்த பயங்கர விபத்தில் தில்லைக்குமார் வீடு மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த விஜயலட்சுமி, மாரியாயி, அமிர்தம், வீரம்மாள் ஆகிய 5 பேரின் வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆனது. மேலும் அருகில் உள்ள 62 வீடுகளும், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன.
இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தண்ணீர் மற்றும் ரசாயன பவுடரை பீய்ச்சி அடித்து கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் கரூரில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, காலை 6 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.
4 பேர் பலி
பட்டாசு மற்றும் சிலிண்டர்கள் வெடித்ததில் வீட்டில் இருந்த தில்லைக்குமார் உடல் சிதறி பலியானார். அவருடைய உடல் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்து கிடந்தது. மேலும் தில்லைக்குமாரின் தாயார் செல்வி (60), மனைவி பிரியங்கா (25) ஆகியோரும் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் கட்டிட இடுபாடுகளை அகற்றி, அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர்.
மேலும், அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பெரியக்காள் (72) என்கிற மூதாட்டியும் தீ விபத்தில் சிக்கி இறந்தார். மேலும் அவரது வீட்டுக்கு அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த வக்கீல் கார்த்திகேயன் (28), பழனியம்மாள் (50), செந்தில்குமார் (49), அன்பரசன் (24) ஆகிய 4 பேர் இந்த பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த பட்டாசு விபத்தில் லேசான காயம் அடைந்த சிலர் மோகனூரில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அமைச்சர், எம்.பி. ஆறுதல்
பட்டாசு வெடித்த சம்பவம் அதிகாலை நடைபெற்றதால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா? எனவும், சேதம் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
விபத்துக்கு காரணம் என்ன?
இதேபோல் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப்பணிகளை கவனித்தனர்.
பட்டாசு குடோனுக்கு வேறு இடத்தில் அனுமதி பெற்றுள்ள நிலையில் அவற்றை தில்லைகுமார் வீட்டில் கொண்டு வைத்தது ஏன்?, விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வா? என மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்த உறவினர்கள் அவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க உருக்கமாக இருந்தது. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது.