மத்திய பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்; 113 பேர் கைது
தேனி உள்பட 5 இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி உள்பட 5 இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்ஜெட் நகல் எரிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், விவசாயத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி நேரு சிலை சிக்னல் அருகில் பட்ஜெட் நகலை எரிக்க விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை வந்தனர். அவர்களை பட்ஜெட் நகலை எரிக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராஜேந்திரன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
113 பேர் கைது
இதேபோல் சின்னமனூர், போடி, வருசநாடு, தேவாரம் ஆகிய 4 இடங்களிலும், பட்ஜெட் நகலை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
அந்த வகையில், மாவட்டத்தில் 5 இடங்களில் மொத்தம் 113 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் கண்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வலவன், மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.