தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முரளிதரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
ஜெய்பீம் புரட்சிப் புலிகள் அமைப்பின் தலைவர் அருந்தமிழரசு தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அணைப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அணைப்பட்டியில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
விவசாய தொழிலாளர்கள்
இதேபோல் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும், 55 வயதான முதியோர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாநில செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
தமிழ்நாடு நாட்டுமாடுகள் நலச்சங்கம் சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.