விவசாயிகளிடம் கரும்புகொள்முதல் செய்ய 13 குழுக்கள் அமைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 340 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதற்காக முழுக்கரும்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான 13 கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உள்ள அலுவலர்களால், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம்.
உதவி மையம்
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இதர மாவட்ட அலுவலர்களும் விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் செய்யலாம். எனவே விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த மாவட்டத்திற்கு தங்களிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகின்றன போன்ற விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக உதவி மையத்தை 04146- 229854 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.