தேனி மாவட்டத்துக்கானவரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு:ஆட்சேபனையை 30-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்
தேனி மாவட்டத்துக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. ஆட்சேபனையை வருகிற 30-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.
வரைவு பட்டியல்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் ஷஜீவனா கூறியதாவது:-
தேனி மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,225 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைத்தல், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றுதல், வாக்குச் சாவடிகள் அமைவிட மாற்றம், மற்றும் பெயர் திருத்தம் ஆகிய பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆட்சேபனை தெரிவிக்கலாம்
அதன்படி, மாவட்டத்தில் அமைவிடம் மற்றும் கட்டிடம் மாற்றம் தொடர்பாக 33 வாக்குச்சாவடிகள், பெயர் மாற்றம் தொடர்பாக 4 வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு செய்யப்பட உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக பெரியகுளத்தில் 7, போடியில் 18, கம்பத்தில் 8 வாக்குச்சாவடிகள் அமைவிட மாற்றம் மற்றும் கட்டிடம் மாற்றம் தொடர்பாகவும், போடி, பெரியகுளத்தில் தலா 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் தொடர்பாகவும் பகுப்பாய்வு செய்யப்பட உள்ளன.
இந்த விவரங்கள் அடங்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியலானது, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் மற்றும் தேனி தாலுகா அலுவலகங்களிலும், தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் யாருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வருகிற 30-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31-ந்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, ஆர்.டி.ஓ.க்கள் பால்பாண்டி (உத்தமபாளையம்), முத்துமாதவன் (பெரியகுளம்), தேர்தல் பிரிவு தாசில்தார் சுகந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.