நாகர்கோவிலில் உணவு திருவிழா நிறைவு
நாகர்கோவிலில் நடந்த உணவு திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து விதவிதமான உணவை ருசித்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடந்த உணவு திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து விதவிதமான உணவை ருசித்தனர்.
உணவு திருவிழா
குமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் உணவு திருவிழா தொடங்கியது. விழாவை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைக்கப்பட்டு இருந்து 43 அரங்குகளின் பல்வேறு மாவட்டங்களின் புகழ்பெற்ற உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது. இதை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு தங்களுக்கு தேவையான உணவு பதார்த்தங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
மேலும் விழாவையொட்டி ஆடல் பாடல், பட்டிமன்றம், நடனம், சிறுகதை, பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவை நடந்தன.
சமையல் பேட்டி
உணவு திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். முதல் நாளைவிட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பொதுமக்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பங்குபெற்ற சமையல் போட்டிகளும் நடத்தப்பட்டது. மதியம் 3 மணி முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் இன்னிசை நிகழ்ச்சியுடன் உணவு திருவிழா நிறைவு பெற்றது.