தஞ்சை- விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள்
தஞ்சை-விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மெலட்டூர்:
தஞ்சை-விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தஞ்சை-விக்கிரவாண்டி சாலை
தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி வரை உள்ள நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையிலான சாலை மிகவும் குறுகலாகவும், பல இடங்களில் வளைவுகள் கொண்டதாகவும் இருந்து வருகிறது. இந்த சாலையின் ஓரத்தில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது. தஞ்சாவூர்-கும்பகோணம் இடையேயான தொலைவு 40 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த தொலைவை பஸ் கடந்து செல்வதற்கு 1½ மணி நேரம் ஆகிறது.
மேம்பாலங்கள்
தஞ்சை விக்ரவாண்டி நான்கு வழி நெடுஞ்சாலையில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, சுள்ளான் ஆறு உள்ளிட்ட 62 இடங்களில் ஆற்றுப்பாலங்களும், தாராசுரத்தில் ெரயில்வே மேம்பாலமும், வளையபேட்டை, ராஜகிரி, மேலசெம்மங்குடி உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலைப்பணிகள் முடிவடைந்துள்ளன.
ஆனால் அன்னப்பன்பேட்டை முதல் தாராசுரம் வரையிலான நெடுஞ்சாலையில் பாபநாசம் அருகே கோபுராஜபுரம், மேல செம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், சூலமங்கலம், அகரமாங்குடி உள்பட பல இடங்களில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள்
இதனால் நெடுஞ்சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. மேலும் தஞ்சை விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2023-க்குள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. எனவே தஞ்சை-விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் தற்போது நடைபெற்று வரும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.