கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டுச்செல்லும் வெள்ளம்
கொள்ளிடத்தில் இருகரைகளையும் வெள்ளம் தொட்டுச்செல்கிறது.
தா.பழூர்:
தா.பழூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரையை தொட்டுக்கொண்டு வெள்ள நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கரையோர கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றின் கரையோரத்தில் நின்று வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்கின்றனர். சில இளைஞர்கள் வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து விளையாடுகின்றனர். கரையோர பகுதியில் போலீஸ் கண்காணிப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆற்றில் இறங்கி விளையாடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆற்றின் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேவைப்படும் இடங்களில் கரையை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.