குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது

தென்காசி

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் 2 நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு தற்போது சாரல் மழை விட்டு விட்டு தூறி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் நேற்று மதியம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

புலியருவியில் குளிக்க அனுமதி

புலியருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர். தற்போது சீசன் இல்லாததால் குறைவான சுற்றுலா பயணிகளே குற்றாலத்திற்கு வருகிறார்கள்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள், என போலீசார் தெரிவித்தனர்.

சாரல் மழை

இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று சில இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தூத்துக்குடி-2, ஸ்ரீவைகுண்டம்-31, காயல்பட்டினம்-4, கோவில்பட்டி-2, கழுகுமலை-6, கயத்தாறு-3, கடம்பூர்-30, எட்டயபுரம்-19, விளாத்திகுளம்-30, காடல்குடி-16, சூரங்குடி-6, வைப்பார்-27, ஓட்டப்பிடாரம்- 5.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யவில்லை. நேற்று காலை நேரத்தில் வெயில் அடித்தது. பிற்பகலில் லேசான மழை பெய்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மணிமுத்தாறு-8, அம்பை -5, சேரன்மாதேவி -31, நாங்குநேரி- 16, பாளையங்கோட்டை- 8, நெல்லை -3. ராமநதி -12, கருப்பாநதி -2, குண்டாறு -1, அடவி நடவினர் -1, ஆய்க்குடி- 12, தென்காசி -1, சங்கரன்கோவில்- 10, சிவகிரி -6.


குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை படத்தில் காணலாம்.



Next Story