கடம்பூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரி; டிராக்டரில் கயிறு கட்டி மீட்டனர்
கடம்பூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை டிராக்டரில் கயிறு கட்டி மலைக்கிராம மக்கள் மீட்டனர்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை டிராக்டரில் கயிறு கட்டி மலைக்கிராம மக்கள் மீட்டனர்.
காட்டாற்று வெள்ளம்
டி.என்.பாளையத்தை அடுத்துள்ளது கடம்பூர் மலைக்கிராமம். இந்த கிராமத்தை சுற்றிய பகுதிகளில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி உள்ளிட்ட பல சிறிய மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடம்பூரில் இருந்து தங்கள் ஊருக்கும், சத்தியமங்கலத்துக்கும் செல்ல வனப்பகுதியை சூழ்ந்த 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது கரடு முரடான சாலையாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாக்கம்பாளையம் வனப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக குரும்பூர் பள்ளம், சர்க்கரைப்பள்ளம் ஆகிய 2 பள்ளங்கள் வழியாக மழை நீரானது காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையம் செல்லும் அரசு பஸ் குரும்பூர் பள்ளத்தை கடந்து சக்கரை பள்ளம் வரையே சென்று வருகிறது. அங்கு பாதியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சத்தியமங்கலம் திரும்பி விடுகிறது.
லாரி சிக்கி கொண்டது
இதன் காரணமாக மலைகிராம மக்கள் தங்களது ஊர்களுக்கும், அன்றாட தேவைகளுக்கு பொருட்களை வாங்குவதற்காக கடம்பூர் மற்றும் சத்தியமங்கலத்துக்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாக்கம்பாளையத்துக்கு திருமண கோஷ்டியினர் சென்ற மினிலாரி ஒன்று சர்க்கரை பள்ளத்தில் ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.
உடனே லாரியில் இருந்தவர்கள் இறங்கி அதை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரங்களை வரவழைத்தனர். பின்னர் டிராக்டரின் முன்பகுதியில் கயிறு கட்டி, லாரியின் பின் பகுதியில் பொக்லைன் எந்திரத்தை வைத்து தள்ளினார்கள். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் லாரி அங்கிருந்து சென்றது.
உயர்மட்ட பாலம்
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, 'மழை காலங்களில் இந்த 2 காட்டாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதெல்லாம் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவது தொடர் கதையாகவே நடந்து வருகிறது. எனவே 2 காட்டாறுகளின் குறுக்கே விரைவில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.