குப்பைதொட்டியாக மாறிய நடைமேம்பாலம்


குப்பைதொட்டியாக மாறிய நடைமேம்பாலம்
x

திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள நடைமேம்பாலம் அசுத்தமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள நடைமேம்பாலம் அசுத்தமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

நடைமேம்பாலம்

வந்தாரை வாழ வைக்கும் ஊரான திருப்பூர் மாநகரில் உள்ளூர், வெளியூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவரும் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிமித்தமாக இங்கு வசித்து வருகின்றனர். அதனால் திருப்பூர் மாநகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறுகிய சாலை காரணமாக தினமும் மக்கள் சாலையை கடந்து செல்வதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.

இதனால் திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நடைமேம்பாலம் சரியாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து ஆபத்தான வகையில் சாலையை கடந்து செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

குப்பைக்கு தீ

இந்தநிலையில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் சாலையை கடந்து மக்கள் செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நடைமேம்பாலத்தின் தற்போதைய நிலையோ கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக பல இடங்களில் குப்பைகளும், மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு போடும் மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை நிறைந்துள்ளது. இதனால் நடைமேம்பாலம் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

இதன்காரணமாக இந்த நடைமேம்பாலம் வழியாக மக்கள் நடந்துசெல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். சிலர் இந்த நடைமேம்பாலம் வழியாக சென்றாலும் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர். அந்த வழியாக ஏன் சென்றோம் என்று நினைக்கும் அளவுக்கு நடைமேம்பாலத்தின் நிலைமை இருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் நடைமேம்பாலத்தில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த மர்ம ஆசாமிகள் குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் தற்போது நடைமேம்பாலம் முழுவதும் கரித்துகள்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அசுத்தமாக காட்சியளிக்கும் இந்த நடைமேம்பாலத்தை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டு கொண்டு வந்து, தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--------


Related Tags :
Next Story