கரூரில் கொடிகட்டி பறக்கும் நுங்கு விற்பனை
கொளுத்தும் கோடை வெயிலால் கரூரில் நுங்கு விற்பனை கொடிகட்டி பறப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடும் வெயில்
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளவும், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்கவும், நீர்ச்சத்து மிகுந்த உணவு பொருட்களையும், பழங்களையும் தேடித்தேடி வாங்கி ருசித்து வருகின்றனர். முக்கியமாக தமிழகத்தில் அதிக அளவு வெயில் தாக்கும் மாவட்டங்களில் ஒன்றாக கரூர் உள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் க.பரமத்தியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், கரூரில் கொளுத்தும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் வேளையில் வீட்டில் முடங்கும் நிலை உள்ளது.
வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கையில் தண்ணீர் பாட்டில், நீர்மோர் பந்தல், குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, சர்பத் ஆகியவற்றை கடைகளில் அதிக அளவு வாங்கி அருந்தினர். மேலும் கரூரில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளில் புளியமரத்தின் நிழல்களில் அதிகமான அளவு கம்பங்கூழ் விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.100-க்கு விற்பனை
அதேபோல் கரூரின் பல்வேறு பகுதிகளில் நுங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், கரூர் நகரில் ஐந்து ரோடு, லைட் ஹவுஸ், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நுங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், தற்போது பனை மரங்கள் குறைந்து வரும் நிலையில் பனை மரங்கள் உள்ள இடங்களை தேடி கண்டறிந்து மரத்தின் உரிமையாளரிடம் அவற்றை விலைபேசி நுங்கை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.
இதில் 2 நுங்கு ரூ.10-க்கும், 12 நுங்கு ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் சாப்பிட்டும், தங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கியும் செல்கின்றனர். இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இருப்பினும் நுங்கு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார்.
இயற்கையான மருந்து
நுங்கு வாங்கி சாப்பிட்ட ஒருவர் அதன் சிறப்பு குறித்து கூறுகையில், பனை மரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கும். ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத்துக்கு நல்லது. பெரும்பாலானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத்தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிக மிக நல்லது. நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தை தணிக்க வல்லது.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. ரத்தசோகை நோய்க்கு நுங்கு இயற்கையான மருந்தாகும். நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்கு தண்ணீரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.