மீன்பிடி தடைக்காலம் நிறைவு: மீன் பிடிக்க உற்சாகமாக புறப்பட்ட மீனவர்கள்..!
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் மீனவர்கள் உற்சாகமாக மீன் பிடிக்க சென்றனர்.
சென்னை,
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட மீனவர்கள் இன்று அதிகாலையில் உற்சாகமாக மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
மீன்பிடி தடைக்காலத்தில் மீன்வரத்து குறைந்ததால் மீன்களின் விலை பலமடங்கு உயர்ந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதால் மீன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.