கருவாடு காய வைக்கும் பணி மும்முரம்
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காய வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காய வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது
பழையாறு மீன் பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த துறைமுகத்தின் மூலம் பல வகையான மீன்கள் பிடிக்கப் பட்டாலும் இங்கு கிடைக்கும் கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், பொறுவாய், குத்து வாய், வாழை, வெள்ளுருட்டான், கவலை, சுறா உள்ளிட்ட 13 வகையான மீன்களை மீனாகவும், அதே நேரத்தில் கருவாடாகவும் உண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பழையார் கருவாடு வியாபாரி பொன்னையா கூறியதாவது:-
மீன்வரத்து குறைவு
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த பருவ மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போதுமான மீன் வரத்து இல்லாதால் கருவாடு தேவைக்கான மீன் வரத்து குறைந்து காணப்படுகிறது.
தற்போது பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்கி உப்புகள் தெளித்து பதப்படுத்தி கருவாடுகளை காய வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெத்திலி, பாறை, சுறா, திருக்கை, காரை, ஆகிய மீன்களின் கருவாடுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
உலர் தளம் அமைக்க வேண்டும்
பழையாறு துறைமுகத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து வந்து பொதுமக்கள் கருவாடுகளை வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கே உற்பத்தி செய்யப்படும் கருவாடுகள் பல்லடம், ஒட்டன்சத்திரம், திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பழையாறு துறைமுகத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 2 டன் மற்றும் அதற்கு மேலும் கருவாடுகள் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்கப்படுவது வழக்கம். தற்போது மீன் வரத்து குறைவின் காரணமாக கருவாடு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பழையாறு துறைமுகத்தில் கருவாடு உலர் தளம் இல்லாததால் துறை முக வளாகத்தில் உலர்த்தி வருகிறோம். அதனால் உலர் தளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.