பைபர் படகுகளை நிறுத்த இடவசதி கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு
பைபர் படகுகளை நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு அளித்தனா்.
வானூர் தாலுகா சோதனைக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மீனவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தின் வடக்குபுறத்தில் எங்கள் ஊரை சேர்ந்த பைபர் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் நிறுத்தி வைக்க 60 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. இதனால் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் எங்களது படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. தற்போது பைபர் படகுகளை நிறுத்துகின்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் ஏற்கனவே கடல் அரிப்பு மற்றும் சுனாமிக்கு பிறகு காலியாக இருக்கும் இடத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள், பைபர் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் நிறுத்தும்படி கூறியதால் அந்த இடத்தை கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு சுத்தம் செய்து கொடுத்து அந்த இடத்தில் பைபர் படகுகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதன்படி நாங்களும் அந்த இடத்தில் பைபர் படகுகளை நிறுத்தி வைத்து வருகின்றோம். இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு யாரோ 3 நபர்கள் அந்த இடத்தை அளப்பதற்கு வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் இந்த இடம் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்று மேற்கண்ட விவரங்களை எடுத்துக்கூறினோம். அதற்கு அந்த நபர்கள், இந்த இடம் தங்கள் இடம் என்றும் நாங்கள் மதில் சுவர் கட்டப்போகிறோம் என்றும் கூறிச் சென்றனர். எனவே தங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் பைபர் படகுகளை நிறுத்துவதற்கு தகுந்த ஏற்பாடு செய்துதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.