மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் கிடைக்காமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.
குளச்சல்:
குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் கிடைக்காமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.
சூறைக்காற்று
குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
இந்தநிலையில், விசைப்படகுகள், வள்ளங்கள் வழக்கம்போல் தொழில் செய்து வந்தன. இந்த நிலையில், மன்னார் வளைகுடா, புதுச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதியில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ. வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 8-ந் தேதி குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட் டது.
கடலுக்கு செல்லவில்லை
இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கடலோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று கரை திரும்பிய விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மற்றும் கிளி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.
சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவையும் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் குளச்சலில் நேற்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
இதே போல் முட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் சந்தைகளுக்கு மீன் வாங்க ஆர்வமுடன் வந்த பொது மக்களுக்கு எதிர் பார்த்த மீன் கிடைக்கவில்லை. மேலும் அங்கு ஐஸ் மீன்கள் மட்டுமே இருந்தது. அதுவும் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மீன் கிடைக்காமல் அவதி அடைந்தனர்்.