விலை இருந்தும் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்


விலை இருந்தும் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தும் எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் வாலிநோக்கம் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தும் எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் வாலிநோக்கம் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தடைக்காலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மட்டும் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. இதை தவிர நாட்டுப்படகு, பைபர் படகு, சிறிய வத்தை உள்ளிட்டவைகளை சேர்த்து 10,000-க்கும் அதிகமான படகுகள் உள்ளன. ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், வேதாளை, கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி தேவிபட்டினம், வாலிநோக்கம், சாயல்குடி மூக்கையூர், கீழமுந்தல் உள்ளிட்ட பல ஊர்களிலும் மீன்பிடி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் மீன்பிடி தடைகால சீசன் ஏப்ரல் 15-ந் தேதி முதல் தொடங்கி ஜூன் 14-ந்தேதி வரை இருக்கும். இந்த 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடந்து வருவதால் ராமேசுவரம், மண்டபம், வாலிநோக்கம், ஏர்வாடி என மாவட்டம் முழுவதும் 1500-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகளுக்கு மட்டுமே தடை உள்ள நிலையில் நாட்டுப்படகு, பைபர் படகு, சிறிய வத்தைகளில் மீனவர்கள் மிகுந்த ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

மீன்கள் கிடைக்கவில்லை

சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியிலும் நாட்டு படகு, பைபர் படகு சிறிய வத்தைகளிலும் மீனவர்கள் மிகுந்த ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். தற்போது தடைக்காலம் நடந்துவரும் நிலையிலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் வாலிநோக்கம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு, பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வரும் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இதுகுறித்து வாலிநோக்கம் நாட்டுப் படகு மீனவர் காதர் கூறியதாவது:- தற்போது விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடைகாலம் நடந்து வருகிறது. இதனால் அனைத்து வகை மீன்களுமே 200 ரூபாயை தாண்டிதான் விலை உள்ளது. மீன்களுக்கு நல்ல விலை இருந்து வரும் நிலையிலும், மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

ஏமாற்றம்

அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தும் மீன்கள் இல்லாததால் மிகுந்த ஏமாற்றம்தான். இவ்வாறு அவர் கூறினார். வாலிநோக்கம் பகுதியில் தற்போது உள்ள மீன்களின் விலை விவரம். விளைமீன் கிலோ 250 ரூபாய். மாவுலா- 400 ரூபாய். முரல்-200 ரூபாய், சூடை-150 ரூபாய். சீலா 550. வாலை 250.


Next Story