கரூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு


கரூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு
x

கரூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சராக பதவி ஏற்று முதன் முதலாக கரூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

நலத்திட்டங்கள்

மேலும் முதல்-அமைச்சருக்கு 1 லட்சம் பேர் எழுச்சியோடு கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும். வருகிற 2-ந்தேதி திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நம் பகுதிகளில் நலத்திட்டங்கள் பெற தகுதி இருந்தும், பெறாமல் இருப்பவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டறிந்து சொன்னால் அவர்களுக்கு முதல்-அமைச்சர் கையால் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

100 ஆண்டு காலம்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றோம். அதுபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி பெற வேண்டும். எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர், தி.மு,க. ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள் என்று பேசியுள்ளார். கறந்தபால் ஒருபோதும் மடி புகாது, ஊர்க்குருவி பருந்தாகாது. இன்னும் 100 ஆண்டு காலம் தமிழகத்தை ஆளப்போவது தி.மு.க. தான். கரூர் மாவட்டத்திற்கு 1 ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடி திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் தி.மு.க.வின் இரும்பு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள். இரா.மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கழக நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, கழக வர்த்தக அணி துணை செயலாளர் வே.பல்லவிராஜா, குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. ராமர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story