மழையால் பட்டாசு தயாரிப்பு பாதிப்பு
சிவகாசியில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 வாரமாக மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை பெய்தது.
இதனால் நேற்று முன்தினம் 70 சதவீதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்ததால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தி 100 சதவீதம் பாதித்தது. பிற்பகல் 1 மணிக்கு பின்னர் வழக்கமான வெயில் இருந்தது. ஆனால் தொழிலாளர்கள் இல்லாத நிலையில் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாமல் போனது.
நெருக்கடி
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் அரசன் ஜி.வி. கார்த்திக் கூறியதாவது:- சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தி பாதித்துள்ளது. இதற்கிடையில் மூலப்பொருட்களின் விலையும் 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஒரு சில மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. இதுவரை 40 சதவீத உற்பத்தியை கூட நெருங்கவில்லை. அடுத்து வரும் நாட்களில் மழை இல்லாமல் இருக்கும் பட்சத்திலும், மூலப்பொருட்களின் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 70 சதவீத பட்டாசுகளே உற்பத்தி செய்ய முடியும். அப்படி இல்லை என்றால் 50 சதவீதம் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.