பழனி முருகன் கோவில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
பழனி முருகன் கோவில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவிலின் பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து கோவிலில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பழனி தீயணைப்புத்துறை சார்பில், பழனி முருகன் கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதற்கு பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி தீத்தடுப்பு மற்றும் பேரிடர், விபத்து காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.
மேலும் கோவில் அருகே உள்ள சமையல் அறையில் கியாஸ் கசிவு ஏற்பட்டால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீயணைப்பு படையினர் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் சிலிண்டரை தீப்பற்ற வைத்து, தீத்தடுப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த முகாமில் பழனி முருகன் கோவில் பணியாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.
------