சத்தியமங்கலம் அருகே குடோனில் தீ விபத்து- வாழைக்காய்-தேங்காய் எரிந்து சேதம்
சத்தியமங்கலம் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாழைக்காய், தேங்காய் எரிந்து நாசமானது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாழைக்காய், தேங்காய் எரிந்து நாசமானது.
வாழைக்காய்-தேங்காய் குடோன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெகமம் பிரிவில் தேங்காய் மற்றும் வாழைக்காய் குடோன் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, கோவை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு மொத்தமாக தரம் பிரித்து பெட்டிகளில் வைத்து வியாபாரத்துக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல் நேற்று காலை பணியாளர்கள் தேங்காய், வாழைக்காய்களை அனுப்புவதற்காக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தீப்பிடித்து எரிந்தது
இந்த நிலையில் மதியம் பணியாளர்கள் அனைவரும் குடோனுக்கு வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது குடோன் உட்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் குடோனில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழைக்காய், தேங்காய் எரிந்து நாசமானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.