அருமனையில் பெட்டிக்கடையில் தீ விபத்து
அருமனையில் பெட்டிக்கடையில் தீ விபத்து நடந்தது.
அருமனை:
அருமனை குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர், தண்ணீர் பாட்டில் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வழக்கம்போல் விற்பனையை முடித்து விட்டு இரவு தனது கடையை பூட்டி விட்டு தூங்க சென்றார். கடையையொட்டி உள்ள அறையில் பாலகிருஷ்ணனின் 90 வயது தாயார் படுத்து தூங்கினார். நள்ளிரவில் ஜன்னல் வழியாக பெட்டிக்கடையில் தீ எரிவதை கண்டார். உடனடியாக அவர் சத்தம் போடவே பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மகன் சென்று பார்த்த போது வீட்டின் முன் பகுதியில் இருந்த ஷோபா செட் மற்றும் ஜன்னல் திரைகள் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தன. உடனடியாக வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கடையில் மற்றும் வீட்டின் முன்பகுதியில் எரிந்த தீ அணைக்கப்பட்டது.
இதுபற்றி அருமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பெட்டிக்கடைக்கு யாரோ தீ வைத்து விட்டனர் என்று பாலகிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.