புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்கூட்டர் நின்றது
புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 36). விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராபாடியில் இருந்து சென்று கொண்டிருந்தார்.
புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்றபோது திடீரென ஸ்கூட்டர் நின்று விட்டது. இதனால் மோகன் ஸ்கூட்டரை விட்டு கீழே இறங்கினார். பின்னர் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கை திறந்து பெட்ரோல் இருக்கிறதா? என்று சோதனை செய்தார்.
தீப்பிடித்து எரிந்தது
அதைத்தொடர்ந்து மீண்டும் ஸ்கூட்டரை இயக்க முயன்றார். அப்போது டேங்க்கில் இருந்து கருமை நிறத்தில் புகை வந்தது. சிறிது நேரத்தில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே ஸ்கூட்டர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தீ விபத்தில் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் மாறியது.
உயிர் தப்பினார்
தீ விபத்தில் மோகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ விபத்தில் எரிந்து சேதமான ஸ்கூட்டரை பார்வையிட்டனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.