பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேருக்கு அபராதம்
அம்பையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி மேல்முகம் இல்லத்தார் தெருவைச் சேர்ந்த நரசிம்மன் என்பவருடைய மனைவி கோமதி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது வீடு அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த 32 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து கோமதி கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரம்மதேசத்தைச் சேர்ந்த முருகன் என்ற கீர்த்தி (வயது 27) மற்றும் அவரது நண்பரான மருதுபாண்டி (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் பல்கலைச் செல்வன், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கும் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி தலா ரூ.4000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.