ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி
கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்திற்கு பா.ஜனதா சார்பில் ரூ.10 லட்சம் நிதியை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்திற்கு பா.ஜனதா சார்பில் ரூ.10 லட்சம் நிதியை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
அண்ணாமலை ஆறுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வேலம்பட்டியில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் பிரபுவின் குடும்பத்தினரை சந்திக்க நேற்று இரவு தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வந்தார். அவர் பிரபுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரபுவின் மனைவி, பெற்றோர் மற்றும் பிரபுவின் அண்ணனும், ராணுவ வீரருமான பிரபாகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து பா.ஜனதா தொண்டர்கள் சார்பில் பிரபுவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அண்ணாமலை வழங்கினார். மேலும் பிரபுவின் 2 குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார். அப்போது, பிரபுவின் மனைவி தனது கணவரை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும். தனது கணவர் நினைவாக, நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உரிய பாதுகாப்பு
நாட்டிற்காக பணி செய்து கொண்டிருந்த ராணுவ வீரர் பிரபு தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த குற்றத்தில் கைதானவர்களில் ஒருவர் தி.மு.க. கவுன்சிலர். மற்றொருவர் அவரது மகன் போலீஸ்காரர். தற்போது பிரபுவின் சகோதரர் பிரபாகரன் மீண்டும் பணிக்கு சென்றால், உள்ளூரில் வசிக்கும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அரசியல் இல்லாமல், பிரபுவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை முதல்-அமைச்சர் அளிக்க வேண்டும். அதே போல் பிரபுவின் மனைவிக்கு அரசு வேலையும், ரூ.5 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும். மேலும், நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். அரசியலை தாண்டி, முதல்-அமைச்சர் பிரபுவின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடும் தண்டனை
மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைந்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். மாணவர்கள் தனித்திறமையாக வரவேண்டும் என்பதற்காக தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எக்காலத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், மாணவர்கள் அரசியல்வாதிகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. கிராமபுறங்களில் கடினமாக கல்வி படித்து சாதனை படைத்தவர்களை தான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2014-ம் ஆண்டிற்கு பிறகு மருத்துவ சீட் இருமடங்காக உயர்ந்துள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக, சிறப்பாக உள்ளனர். தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் போலியான வீடியோக்கள் பதிவு செய்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், துணை பொதுச்செயலாளர் நரேந்திரன், முன்னாள் எம்.பி. நரசிம்மன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.