குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
செறிவூட்டப்பட்ட அரிசி, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
மயிலாடுதுறை,;
செறிவூட்டப்பட்ட அரிசி, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
போதுமான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வினியோகிப்பதை கண்டித்தும், தமிழக நீர்நிலைகளை பாதிக்கும் ஒருங்கிணைந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மயிலாடுதுறை விவசாயிகள் சங்க மாவட்டக்குழுவினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
வெளிநடப்பு
கூட்டத்துக்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையிலான விவசாயிகள் தங்கள் கோாிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினா். தொடர்ந்து இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினர் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.பின்னர் செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் விளம்பர பேனர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு முகாம் நடத்தியதை கண்டித்தும், தமிழக நீர்நிலைகளை பாதிக்கும் ஒருங்கிணைந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2023-யை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
அன்பழகன் (பொதுச்செயலாளர், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்) : மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்திக்கு விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை முன்கூட்டியே திறக்க வேண்டும். மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.முன்னாள் எம்.எல்.ஏ.கல்யாணம்: குறைந்த மின்அழுத்தத்தால் மின்மாற்றிகள் பழுதடைகிறது. தேவையான மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) முன்னெச்சரிக்கையாக கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீனவர்களுக்கான குறைத்தீர் கூட்டம் குறித்து செய்தி வெளியிடப்படுகிறது. கிராமப்புற மீனவர்களுக்கு தகவல் முழுமையாக சென்றடையவில்லை. மீனவர்நலத்துறை சார்பில் கிராமங்கள் தோறும் தகவல் தெரிவித்து அதன்பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இயற்கை விவசாயம்
குருகோபிகணேசன் (தலைவர், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம்) : குறுவை தொகுப்புதிட்டத்தை உடனே அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் இருப்பதால் மின்மாற்றிகள் பழுதடைகிறது. சீரான மின்சாரம் கிடைக்கவும், குறுவை சாகுபடிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்.வரதராஜன்: இயற்கை முறையில் உற்பத்திசெய்யப்படும் பாரம்பரிய அரிசி ரகங்களை ரேஷன்கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மயில்களால் பயிர்கள் சேதமடைவதற்கான இழப்பீடு வழங்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் சேகர், நீர்வளஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.