கும்பகோணம் காவிரி ஆற்றில் புதர்கள் அகற்றப்படுமா?
கும்பகோணம் காவிரி ஆற்றில் புதர்கள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கும்பகோணம் காவிரி ஆற்றில் புதர்கள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தண்ணீர் திறப்பு
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போக நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த தண்ணீரை நம்பி பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டும் வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் பல பகுதிகளில் ஆற்றின் நடுவில் கருவேலம், காட்டாமணக்கு மற்றும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகள்
காவிரி ஆற்றில் புதர் மண்டி கிடப்பதால் அணையில் இருந்து வரும் தண்ணீர் பெருமளவு வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். மேலும் ஆற்று நீர் கடை மடை வரை செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
மேலும் காவிரி ஆற்றின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் ஏராளமாக தேங்கி கிடப்பதால் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் கும்பகோணம் பகுதியை தாண்டி கடைமடை பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் சூழல் இருந்து வருகிறது.
அகற்ற வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'உடனடியாக காவிரி ஆற்றின் நடுவே மண்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும். அத்துடன் ஆற்றில் தேங்கி உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் வரும் தண்ணீர் அசுத்தமாக மாறும். புதர்களால் ஆற்றின் நீரோட்டத்துக்கு தடை ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீர் தூய்மையாகவும், எந்தவித தடங்களும் இல்லாமல் கடை மழையை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.