நசுவினி ஆற்றை தூர்வார வேண்டும்
பட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நசுவினி ஆறு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காட்டாறுகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் சில இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திட்டக்குடி ஊராட்சி மற்றும் சூரப்பள்ளம் ஊராட்சி வழியாக செல்லும் நசுவினியாற்றை தூர்வாரும் பணி கடந்த ஆண்டு ரூ.10 லட்சம் செலவில் நடந்தது.
ஆனால் தற்போது அந்த ஆற்றில் முள் செடிகளும், கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன.
விவசாயிகளை பாதிக்கும் அபாயம்
இதனால் ஆற்றில் நீேராட்டம் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பருவமழை காலத்தில் பலத்த மழை பெய்தால் இந்த ஆற்று படுகையில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள வயல்களில் சென்று பயிர்களை மூழ்கச் செய்து விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் திட்டக்குடி ஊராட்சி, சூரப்பள்ளம் ஊராட்சி வழியாக செல்லக்கூடிய நசுவினி ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.