தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்- விவசாயிகள்
பேராவூரணியில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தென்ைன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணியில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தென்ைன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்காய் விலை வீழ்ச்சி
பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயிகள் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். பேராவூரணி தேங்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது தேங்காயின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.8 முதல் ரூ.9.30 வரை மொத்த வியாபாரிகள் தோப்புகளில் வந்து கொள்முதல் செய்கின்றனர்.
தேங்காய் உற்பத்திக்கான செலவு மற்றும் தேங்காய் பறிப்பு கூலி, தேங்காய் உரியல் கூலி, மரங்களுக்கு உரம் இடுதல் போன்ற செலவுகள் ரூ.6 முதல் ரூ.7 வரை ஒரு தேங்காய்க்கு செலவாகிறது.
தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம்
தற்போது கொப்பரை தேங்காயின் விலை தனியார் கொள்முதல் நிலையத்தில் 1 கிலோ ரூ.60 முதல் ரூ.75-க்கு வாங்கப்படுகிறது. அரசு நபார்டு மூலம் ரூ.108-க்கு கொப்பரை தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் இதுவரை நிரந்தரமாக அமைக்கவில்லை.
கோடை காலத்தில் தேங்காய் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி அடையும் நேரத்தில் விவசாயிகள் தேங்காயை கொப்பரையாக விற்று வருகின்றனர். எனவே பேராவூரணியில் அரசு நிரந்தரமாக தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது பேராவூரணியில் கொள்முதல் நிலையம் அமையும் வரை பட்டுக்கோட்டை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரத்தில் புதன்கிழமைகளில் தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெறுவதை போல் பேராவூரணி பகுதிகளிலும் ஏலத்தை நடத்த வேண்டும்.
கொள்முதல் செய்ய வேண்டும்
பட்டுக்கோட்டை பகுதியில் அரசு கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏலம் நடைபெறும் இடத்திற்கு தென்னை விவசாயிகள் அதிகமாக வருவதால் பேராவூரணியில் மாதத்தில் 2 புதன்கிழமைகளில் அரசு கொப்பரை கொள்முதல் நிலையத்தை தற்காலிகமாக நடத்தி தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் என அப்பகுதி தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.