கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்


கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
x

பாபநாசம் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

பாபநாசம் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல் கொள்முதல்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையினால் நெல்மணிகள் நனைந்து விட்டது. இதையடுத்து விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தார்பாய்களை கொண்டு நெல்லை மூடி வைத்து, இரவு, பகலாக பாதுகாத்து வருகிறார்கள்.

இங்கு தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக நெல் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் கொள்முதல் செய்து உரிய தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டகை வசதி

மேலும், இங்கு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாடகை இடத்தில் இயங்கி வருகிறது. கொட்டகை வசதி கூட இல்லாமல் திறந்த வெளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. உடனடியாக தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பாபநாசம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிட வசதி செய்து விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்லை தேக்கமடையாமல் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

பாதுகாப்பதில் சிரமம்

இதுகுறித்து பாபநாசம் விவசாயிகள் சங்க துணைத்தலைவர் கணேசன் கூறுகையில், 'பாபநாசம் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. மழை பெய்த நிலையில் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்' என்றார்.

பாபநாசம் முன்னோடி விவசாயி திருஞானசம்பந்தம்:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் இயக்கம் செய்யப்படாமல் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் மூட்டைகள் இருப்பில் உள்ளன. இவ்வாறு இருப்பு இருப்பதால் இயற்கையாக ஏற்படும் இழப்பு ஏற்படுகிறது.

இயக்கம் செய்ய வேண்டும்

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பெய்த மழையில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.


Next Story