பொங்கல் பரிசுடன் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா?- விவசாயிகள்


பொங்கல் பரிசுடன் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா?- விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:30 AM IST (Updated: 8 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பரிசுடன் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்

தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பரிசுடன் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தேங்காய் விலை வீழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை போக்கும் வண்ணமாகவும் தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில், சாகுபடி செய்யப்படும் தேங்காய் தரம் காரணமாக உலகளவில் சிறப்பு பெற்றது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளும், இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகமும் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் 2-வது மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கிவரும் தென்னை 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் பெயர் பெற்றுள்ளது.

பிஸ்கட் கம்பெனிகள்

இதன் காரணமாக, உலகளவில் சிறப்பு பெற்ற இப்பகுதி தேங்காய்கள், புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விருப்பமாக உள்ளது. இப்படி பெயர் பெற்ற தேங்காய் வருமானம், கடந்த 2018 ஆண்டு வீசிய கஜா புயலில், சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 1.50 லட்சம் தென்னைகளை இழந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தேங்காய் மூலம் வருவாயின்றி விவசாயிகள் தடுமாறி வந்தனர்.தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி அதிகரிக்க தொடங்கி, இழப்பில் இருந்து, மீண்டு வந்தனர். இந்த நிலையில் கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும், பொள்ளாச்சி போன்ற வெளி மாவட்டங்களிலும் இதேபோல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி நின்று விட்டது

இதனால் இப்பகுதியில் ஏற்றுமதி நின்று விட்டது. எனவே, வாங்கிய தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும், உற்பத்தியான தேங்காயை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமலும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

காரணம், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் இருந்து நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சென்னை, காங்கேயம், வெள்ளக்கோயில் போன்ற பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது ஏற்றுமதி நின்றுவிட்டது.

விலை வீழ்ச்சி

இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 20 ரூபாயாக குறைந்தது ஆனால், தற்போது விற்பனையின்றி விலை வீழ்ச்சி அடைந்து 10 ரூபாய் முதல் 11 ரூபாயாக உள்ளது. இதனால் வெட்டிய தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளிலும், தேங்காய் வெட்ட முடியாமல் மரங்களிலும் கிடக்கிறது. இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் உரிக்கும் தொழிலாளிகள், தேங்காய் வெட்டும் தொழிலாளிகள், கொப்பரை காய வைப்போர் உட்பட பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி செய்வதறியாது உள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயி ஆவணம் அடைக்கலம் கூறுகையில், தேங்காய் விலை ஒரேயடியாக 10 ரூபாய் என்ற விலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 100 தேங்காய்க்கு லாபக்காய் என 8 தேங்காயையும் வியாபாரிகள் கூடுதலாக வாங்கிக் கொள்கின்றனர். கடைசியில், ஒரு தேங்காய்க்கு விவசாயிகளுக்கு 7 ரூபாய் தான் கிடைக்கிறது.

ஆதாரவிலை

ஒரு தேங்காயின் உற்பத்தி செலவே ரூ.7 வரை ஆகிறது. அரசும் நெல்லுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது போல தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க, அரசே கொள்முதல் செய்கிறது. மேலும், விவசாயிகளுக்கும் ஆதார விலையை உயர்த்தி தருகிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும். மேலும், கொப்பரைத் தேங்காயை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம், கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல், கரும்புக்கு தருவது போல, தென்னைக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பேராவூரணி - பட்டுக்கோட்டை பகுதியை மையமாக வைத்து, தென்னை சார்ந்த நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி, தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் பருப்பு, தேங்காய் எண்ணெய், சோப், தேங்காய் சிரட்டையில் இருந்து கார்பன் தயாரிப்பு, மிதியடி, கலைப்பொருட்கள் போன்ற காயர் உற்பத்தி பொருட்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும்.

தென்னை பூங்கா

ஜவுளி பூங்கா போல, தென்னை பூங்கா அமைத்து தென்னை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.ரேசன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இப்பகுதி முன்னோடி தென்னை விவசாயிகளை அழைத்து அரசு ஆலோசனை பெற வேண்டும் என்றார்.மேலும் பொங்கல் பரிசு கரும்புடன் தேங்காயும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு அரசு விலை நிர்ணயம் செய்ததுபோல் தேங்காய்க்கும் அரசு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தால் 2.50 கோடி தேங்காய் விற்பனையாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story