பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் உரிமை-ஐகோர்ட்டு கருத்து


பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் உரிமை-ஐகோர்ட்டு கருத்து
x

பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் உரிமை என கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.

மதுரை

பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் உரிமை என கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.

அவமதிப்பு வழக்கு

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுவதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுமானப்பணிக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையை வழங்கும்படி கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் இந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் 3 மாவட்ட கலெக்டர்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.

ஜனநாயக உரிமை

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் ஜனநாயக உரிமை எனவும் கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், இழப்பீடு வழங்குவது குறித்து பதில் அளிப்பதற்காக கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களின் கலெக்டர்களும் வருகிற 9-ந்தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story