காற்றாலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


காற்றாலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
x

மானூர் பகுதியில் காற்றாலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

திருநெல்வேலி

மானூர் பகுதியில் காற்றாலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விஷ்ணு தலைமையில் நேற்று நடந்தது.

நெல்லை மாவட்டம் குப்பக்குறிச்சி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு மனு வழங்கினர். அதில், ''எங்கள் ஊரில் சமத்துவபுரம் அமைக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் மனு கொடுத்ததால், அதனை ரத்து செய்தார்கள். பின்னர் தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதனை ரத்து செய்து உள்ளூர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் திருமண மண்டபம், சமுதாய நலக்கூடம், ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

காற்றாலை அமைக்க...

மானூர் வட்டார தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுணன் மற்றும் விவசாயிகள் வழங்கிய மனுவில், ''தாழையூத்து, தென்கலம், பல்லிக்கோட்டை, நாஞ்சான்குளம் வருவாய் கிராமங்களில் உள்ள கீழ தென்கலம், நல்லம்மாள்புரம், தென்கலம்புதூர், புளியங்கொட்டாரம், நாஞ்சான்குளம், பள்ளமடை, அலவந்தான்குளம் ஆகிய ஊர்களில் சோலார் மின்உற்பத்தி நிலையம் மற்றும் காற்றாலைகள் அமைப்பதற்கு 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும். எனவே சோலார் மின்உற்பத்தி நிலையம், காற்றாலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

சலவை தொழிலாளர்கள்

மேலப்பாளையம் பாத்திமா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தலைவர் முஸ்தக்அலி தலைமையில் வழங்கிய மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் வேறு நபர்கள் போலி பத்திரங்கள் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

வீரவநல்லூர் பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் மனு கொடுத்தனர். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் வழங்கிய மனுவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் அனைவருக்கும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு மற்றும் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு

நெல்லை மாநகர மற்றும் சரக ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் நலச்சங்க செயலாளர் சுரேஷ் கொடுத்த மனுவில், அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கோஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகள் தவணை முறையில் கடனாக வழங்கி மாதாந்திர ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். பருத்திப்பாட்டைச் சேர்ந்த மகாராஜன் தனது குடும்பத்தினருடன் வழங்கிய மனுவில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனது மகள் நல்லதாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.

நாங்குநேரி அருகே அரியகுளம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் மரியசெல்வி தலைமையில் அப்பகுதி மக்கள் வழங்கிய மனுவில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். நல்ல நிலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை தற்போது கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.


Next Story