கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு- சிவகிரியில் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது
கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு சிவகிரியில் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது.
ஈரோடு
கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு சிவகிரியில் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது.
ஆலோசனை கூட்டம்
கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்க ஆலோசனை கூட்டம் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னையன், பொருளாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1950-ம் ஆண்டு கீழ்பவானி அணையை கட்டுவதற்கும், வாய்க்காலை வெட்டுவதற்கும் செலவிடப்பட்ட ரூ.10 கோடியே 33 லட்சத்தை ஆயக்கட்டு விவசாயிகள் வளர்ச்சி வரியாக ஏற்கனவே செலுத்திவிட்டதால், கீழ்பவானி பாசனத்தில் ஆயக்கட்டு பாசனதாரர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
கீழ்பவானி ஆயக்கட்டில் இல்லாத முறைகேடான நீரேற்று பாசனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
மாநாடு
கீழ்பவானி வாய்க்கால் பாசன நோக்கத்துக்காக அளவீடு செய்து அமைக்கப்பட்டதாகும் என்பதால், குடிநீர் நோக்கத்துக்காக பயன்படுத்தக்கூடாது. இந்த வாய்க்காலை சீரமைத்து அனைத்து ஆயக்கட்டு பாசனதாரர்களுக்கும் சீராக தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
"தாராபுரம் கட்" என்ற பெயரில் நீக்கம் செய்துள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்தில் இணைக்க வேண்டும். 34 கசிவுநீர் திட்டத்தின் கீழ் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயக்கட்டில் இணைக்க வேண்டும்.
நகரமயமாதல் காரணமாக பாசனம் பெறாத சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆயக்கட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு சிவகிரியில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி நடத்தப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமசாமி, தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.