சூரியகாந்தி விதைகளை சாலைகளில் உலர்த்தும் விவசாயிகள்


சூரியகாந்தி விதைகளை சாலைகளில் உலர்த்தும் விவசாயிகள்
x

நெல்களம் இல்லாததால் சூரியகாந்தி விதைகளை சாலைகளில் விவசாயிகள் உலர்த்த வேண்டிய நிலை உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

நெல்களம் இல்லாததால் சூரியகாந்தி விதைகளை சாலைகளில் விவசாயிகள் உலர்த்த வேண்டிய நிலை உள்ளது.

நெல்களம்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஊராட்சிகளிலும் நெல் களம் அமைக்கப்பட்டது. நாளடைவில் நெல் களம் பராமரிக்கப்படாததால் பல இடங்களில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

இதனால் விவசாயிகள் அருகில் உள்ள தார் சாலையை நெல் களமாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது சூரியகாந்தி அறுவடை முடிவடைந்த நிலையில் தரம்பிரிப்பதற்கு குகன் பாறையிலிருந்து சங்கரபாண்டியாபுரம் வழியாக ஏழாயிரம்பண்ணை செல்லும் தரைப்பாலத்தை விவசாயிகள் பயன்படுத்து வருகின்றனர்.

விவசாயிகள் சிரமம்

இதுகுறித்து குகன் பாறையை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் குகன் பாறை, செவல்பட்டி, சிப்பிப்பாறை, சங்கரபாண்டியாபுரம், சத்திரம், துலுக்கன்குறிச்சி, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாகும். ஆனால் இப்போது நெல்களம் இல்லாததால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும், தரம் பிரிப்பதற்கும் முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சென்ற ஆண்டு சூரியகாந்தி விதைகள் அறுவடைக்கு பின்பு குவிண்டாலுக்கு ரூ. 7 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது சூரியகாந்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 4,900 மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளோம். ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story