விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம்; வேளாண் அதிகாரி தகவல்
விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
விதை மாதிரிகள் பகுப்பாய்வு
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலமாக விதைச்சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயல்களில் ஆய்வு செய்யப்பட்டு, வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
வயல் தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டு, அந்த வயல்மட்ட விதைகளை அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு, விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன. பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதைகள் சான்று செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
அதிக மகசூல்
சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிறச்சான்று அட்டையும், சான்று விதைகளுக்கு நீலநிற அட்டையும் பொருத்தப்படுகிறது. மேலும் சான்று பெற்ற விதைகளில், வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சைநிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக்கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாக கண்டறியலாம். சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம் போன்ற குணநலன்களை கொண்டிருக்கும்.
எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்தும்போது அதிக விளைச்சல் கிடைக்கும். தற்போது பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையினரால் சான்றளிப்பு செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்ற நீண்ட கால மற்றும் மத்திய கால நெல் ரகங்களான சி.ஆர்.1009 சப்-1, ஏ.டி.ட்டி-51, ஏ.டி.ட்டி-54, ஏ.டி.ட்டி-38, ஏ.டி.ட்டி-39, கோ (ஆர்) 50, கோ (ஆர்) 51, பி.பி.டி 5204 ஆகிய ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெய்வீகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.