பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மெய்யூர், நாச்சானந்தல், காம்பட்டு, வரகூர், சதாகுப்பம், பெருந்துறைப்பட்டு, அகரம்பள்ளிப்பட்டு, கூடலூர், சேர்ப்பாப்பட்டு, சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, வெறையூர், தலையாம்பள்ளம், நவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் ஆண்டு பயிரான கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களையும் நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட தானிய வகை பயிர்களையும் பருவ காலத்திற்கு ஏற்ற பயிர்களான சாமந்தி, முல்லை, அரும்பு, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் வகையான பயிர்களையும், காய்கறி பயிர்களையும் அதிக அளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்தி பெரும்பாலும் விவசாயம் செய்து வரும் நிலையில் ஒரு சில விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

பூக்கள் விலை வீழ்ச்சி

அதன்படி இப்பகுதி விவசாயிகள் வாடாமல்லி பூக்கள் வகையான பயிர்களை பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது மெய்யூர், நாச்சானந்தல், காம்பட்டு, சேர்ப்பாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள இந்த வகை பூக்களை வியாபாரிகள் குறைந்த அளவே வாங்கிச் செல்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல் மாலை செய்வதற்கு இந்த வகையான பூ மிகவும் பயன்படுகிறது. இந்த பூக்கள் விலைவீழ்ச்சியால் கிலோ 10 ரூபாய் முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.

இதனால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இல்லாததால் இந்த வகையான பூக்களை பயிரிடுவதை தவிர்த்து வருகிறோம். மேலும் வியாபாரிகள் நேரடியாக எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி சென்று அவர்கள் விற்கும் போது ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கின்றனர்.

இதனால் பயிரிடப்பட்ட தொகை கூட பெற முடியவில்லை. மேலும் இப்பகுதிகளில் பெரும்பாலும் பலவிதமான பூக்கள் வகையான பயிர்களை பயிரிடப்பட்டு அதனை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறோம். எனவே பூக்களுக்கு என்று தனியாக விலை நிர்ணயம் செய்து ஓரளவுக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு மேம்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story