எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்த விவசாயி


எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்த விவசாயி
x

எந்திரத்தில் சிக்கி விவசாயி காயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகர்(வயது 63). விவசாயியான இவர், நேற்று கோடை சாகுபடிக்காக உழவு எந்திரம் மூலம் நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்து இருந்த கைலி எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் அவருடைய இடது தொடையில் இருந்து முழங்கால் வரை டிராக்டரில் இருந்த இரும்பு கம்பி கிழித்து சதைகள் தொங்கிய நிலையில் காணப்பட்டது. மேலும் அதிக அளவில் ரத்தம் வீணாகியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து அவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் 108 ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் குணசேகர் அடிபட்டு கிடந்த வயல், சாலையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருந்ததால் அங்கு ஆம்புலன்சு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன், டெக்னீசியன் விஜயபாஸ்கரன் ஆகிய இருவரும் அங்கிருந்த தொழிலாளர்கள் உதவியுடன், ஸ்டிரெச்சரில் காயமடைந்த குணசேகரனை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளியில் தூக்கிக்கொண்டு சாலைக்கு வந்தனர். பின்னர் அவருக்கு அங்கேயே தேவையான முதலுதவி சிகிச்சையை அளித்து தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story