மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
சிவகிரி:
ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூர் ஐங்கறு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குத்தாலம் மகன் தங்கத்தடி (வயது 52). விவசாயி. இவர் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் யானை கருப்பசாமி கோவில் அருகே ஒரு வயலை குத்தகைக்கு எடுத்து 3 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார். தற்போது நெல் பயிரிட்டுள்ளார்.
இங்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நெல் பயிர்களை நாசம் செய்ததால் விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக வயலில் உள்ள பம்பு செட்டில் இருந்து வெளியே மின்விளக்கு அமைப்பதற்காக தனியாக வயர் எடுத்து வந்து கம்பு ஊன்றி விளக்கு அமைத்தார். அப்போது விளக்கு சரியாக எரியவில்லை. எனவே `கட்டிங் பிளேடு' வைத்து மின் ஒயரை சரிசெய்தார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
இதுபற்றி அறிந்த அவருடைய சகோதரர் காசிராஜன் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்து போன தங்கத்தடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.