தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை, உறவினர் மறியல்


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை, உறவினர் மறியல்
x

வள்ளிமலை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர் மறியல் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர்

விவசாயி தற்கொலை

காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த பெரிய போடி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 60), விவசாயி. இவர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தனது வயலில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது மகன் மணிகண்டன் கூச்சலிட்டு கதறி உள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று நாகேஷின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவலை அறிந்த மேல்பாடி போலீசார் சென்று நாகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாகேஷின் உடலை போலீசார் எடுத்து செல்லாமல் தடுத்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிரட்டல்

தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் காட்பாடி பழனி, வேலூர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வழக்குப் பதிவு செய்தால் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என்ன கூறியதன் பேரில் மேல்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக கூறினர். அதன்பிறகு பிரேத பரிசோதனைக்கு உடலை ஒப்படைத்தனர்.

பெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன், பொக்லைன் எந்திரம் மூலம் நாகேஷின் வாழை மரம், பூச்செடிகள் முருங்கை மரங்கள் போன்றவற்றை அழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் மேல்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் கோட்டீஸ்வரன் தலைமையில் சிலர் சென்று நாகேஷை மிரட்டியுள்ளனர்.

5 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் மேல்பாடி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்ததின் காரணமாக நாகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் நாகேஷ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் காணப்படுகிறது.


Next Story