சிதம்பரம் ஆஸ்பத்திரி பெண் பணியாளர் சாவில் திருப்பம்: 'உல்லாசத்துக்கு மறுத்ததால் கொன்றேன்' கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்


சிதம்பரம் ஆஸ்பத்திரி பெண் பணியாளர் சாவில் திருப்பம்:  உல்லாசத்துக்கு மறுத்ததால் கொன்றேன்  கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
x

சிதம்பரம் தனியார் ஆஸ்பத்திரி பெண் பணியாளர் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உல்லாசத்துக்கு மறுத்ததால் கொன்றேன் என கள்ளக்காதலன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர்


புவனகிரி,

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மனைவி சீதா என்கிற சீதாலட்சுமி (வயது 43). இவர்களுக்கு நிஷாந்த் (25), பிரசாந்த் (20) என்று 2 மகன்களும், நிஷாந்தி (22) என்கிற மகளும் உள்ளனர்.

முத்துவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 2 மகன்களும் கோவையில் பணிபுரிகிறார்கள். மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனியாக வசித்து வந்த சீதாலட்சுமி சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ந்தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சீதாலட்சுமி, இரவு வீட்டில் தூங்கினார். அப்போது, அவரை மர்ம நபர் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார்.

பஸ்நிலையத்தில் பதுங்கினார்

இது பற்றி அறிந்த புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை, புவனகிரி பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அவரை மடக்கி பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில் அவர் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் குமார்(48) என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சீதாலட்சுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் பற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்காதல்

எனக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வருகிறேன். எனக்கும் சீதா என்கிற சீத்தாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

தற்போது, நான் புதுச்சேரியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறேன். இதனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊருக்கு வருவேன். அன்று இரவு சீதாலட்சுமியும், நானும் உல்லாசமாக இருப்போம்.

நீ வேண்டாம் போ...

அந்த வகையில் கடந்த வாரம் (11-ந்தேதி) புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். அன்றைய தினம் இரவு, சீதாலட்சுமியின் வீட்டுக்கு சென்று உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால், அவர் நான் வேறு நபரை வர வைத்து விட்டேன், அவருக்காக காத்திருக்கிறேன், எனவே இன்று நீ வேண்டாம் போ என்று கூறினார்.

நான் எவ்வளவோ முயற்சி செய்தும், உல்லாசத்துக்கு அவர் சம்மதிக்காமல், முதலில் இங்கிருந்து புறப்பட்டு போ என்று தெரிவித்தார். அவரை கட்டாயப்படுத்த நான் முயற்சித்த போது, ஆபாசமான வார்த்தையால் என்னை திட்டினார்.

அம்மிக்கல்லை போட்டு கொலை

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நான் அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து சீதாலட்சுமியின் தலை மற்றும் உடலில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர் என்று தெரிவித்தார். இதையடுத்து குமாரை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story