கூலி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது கூலி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது கூலி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன், உதவி கலெக்டர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான குணசேகரன் அவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியே சென்று விட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார்.
அந்த சமயத்தில் நின்று கொண்டிருந்த குணசேகரன் மறைந்து கொண்டு வந்திருந்த கேனை வெளியே எடுத்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை கண்டு கார் டிரைவர் அவரை தடுத்தி நிறுத்தினார். பின்னர் போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கூறுகையில், முன்விரோதம் காரணமாக சிலர் எங்களை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் அவர்களை கைது செய்யவில்லை.
எங்கள் வீட்டின் முன்பு உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு எங்களை பயமுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவரை போலீசார் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை தாலுகா கொளக்கரவாடி யாதவபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கொளக்கரவாடி கிராமத்தில் இருந்து யாதவபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு சிமெண்டு சாலை உள்ளது.
அந்த சாலை வழியாக 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலையை அளவிடு செய்து சாலையின் ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.