முன்னாள் பேராசிரியர்-மகன்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் பேராசிரியர் மற்றும் அவரது மகன்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு உத்தரவிட்டது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் பேராசிரியர் மற்றும் அவரது மகன்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு உத்தரவிட்டது.
42 பேரிடம், ரூ.1½ கோடி
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பொன்பரப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 66). இவர், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சிவசங்கர்(41), பிரம்மா(40), விஷ்ணு(38) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் பிரம்மா, ஜெர்மனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2007-ம் ஆண்டு ரஷியா, ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளை சேர்ந்த 42 பேரிடம் ரூ.1½ கோடியை கிருஷ்ணன், விஷ்ணு, சிவசங்கர் ஆகியோர் வாங்கியுள்ளனர்.
போலீசில் புகார்
ஆனால் தாங்கள் கூறியபடி 42 பேரையும் ரஷியா, ஜெர்மனி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாமல் கிர்கிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளுக்கு அனுப்பி உள்ளனர். அங்கு வேலைக்காக சென்றவர்களுக்கு அவர்கள் கூறியபடி பணியும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு வேலை வாங்கித்தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சீர்காழியை சேர்ந்த ஜெயராமன் என்பவர், நாகை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
முன்னாள் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பணமோசடி செய்யப்பட்டதில் பிரம்மாவுக்கு தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்ததையடுத்து கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு, சிவசங்கர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த வழக்கு கடந்த 2009-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் சிவசங்கர், பிரம்மா, விஷ்ணு ஆகிய 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை
இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் சிவசங்கர், விஷ்ணு ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் பிரம்மா மட்டும் ஆஜராகாததால், அவரது வழக்கு தனியாக கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.